மே தினத்தையொட்டிஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
மே தினத்தையொட்டி, தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டம்
தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மே தின கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது.
ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மே தின உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பாதியில் வெளியேறிய பார்வையாளர்கள்
தேனி அருகே அரண்மனைப்புதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வரவு, செலவு கணக்கு விவரங்களை பார்வைக்கு வைக்குமாறு கூறினர். ஆனால், பழைய கணக்கு விவரங்கள் வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஓராண்டு கால செலவின புத்தகம் வைக்கப்படவில்லை என்று கூறி மக்கள் சிலர் குற்றம்சாட்டினர். மேலும் ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், முல்லைநகர் காலனி பகுதியில் நீண்டகால பிரச்சினையாக உள்ள பிரதான சாலையை சீரமைக்க வேண்டும், அய்யனார்புரம் சமுதாயக்கூடத்தை பராமரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனர்.
மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் கிராமசபை கூட்ட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், சில ஊராட்சிகளில் கூட்டம் முடியும் முன்பே பார்வையாளர்களாக வந்த அதிகாரிகள் பாதியில் வெளியேறிவிட்டனர். இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.