நவராத்திரி விழாவையொட்டி கடலூர் கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து பொதுமக்கள் வழிபாடு


நவராத்திரி விழாவையொட்டி கடலூர் கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து பொதுமக்கள் வழிபாடு
x

நவராத்திரி விழாவையொட்டி கடலூர் கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினா்.

கடலூர்

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி விழா. இந்த நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசூரன் என்ற அசுரனுடன், ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு 10-வது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாகும். இதை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி கோவில்கள், வீடுகளில் 9 நாட்கள் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். இந்த கொலுவில் கடவுள் பொம்மைகள், விலங்கின பொம்மைகள், இயற்கை காட்சிகள் அடங்கிய பொம்மைகள், தெய்வீக பொருட்கள் உள்ளிட்ட பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்துவார்கள்.

கொலு வைத்து வழிபாடு

இந்த விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை முடிந்து மறுநாள் நவராத்திரி விழா தொடங்குகிறது. அதன்படி நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர் அமர்ந்தவாழியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். இதேபோல் வீடுகளிலும் 9, 7, 5 என படிகள் அமைத்து கொலு பொம்மைகளை வைத்து பொதுமக்கள் வழிபட தொடங்கினர். முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மனுக்கும், அடுத்த 3 நாட்கள் லட்சுமிக்கும், அதற்கடுத்த 3 நாட்கள் சரஸ்வதிக்கும் நவதானியங்களை வைத்து படையல் செய்து வழிபட தொடங்கினர்.


Next Story