தூத்துக்குடியில் நவராத்திரி விழாவை முன்னிட்டுகொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பு


தூத்துக்குடியில் நவராத்திரி விழாவை முன்னிட்டுகொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பு
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நவராத்திரி

தமிழகம் முழுவதும் நவராத்திரி விழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா நேற்று தொடங்கியது. வருகிற 23-ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. நவராத்திரி விழாவையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் 9 நாட்களும் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதனால் தூத்துக்குடியில் கொலு பொம்மைகள் விற்பனை களைக்கட்ட தொடங்கி உள்ளது. தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கொலு பொம்மைகளுக்கான சிறப்பு கண்காட்சி விற்பனை நடந்து வருகிறது. இங்கு பல வண்ணங்களில், வித விதமான ஆயிரக்கணக்கான கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து கொலு பொம்மை விற்பனையாளர் கூறும் போது, கடந்த 40 ஆண்டுகளாக கொலு பொம்மைகளை விற்பனை செய்து வருகிறோம். தஞ்சை, கும்பகோணம், மாயவரம், காஞ்சிபுரம், பண்ருட்டி, கடலூர் போன்ற பகுதிகளில் உள்ள கைவினை கலைஞர்களிடம் இருந்து பொம்மைகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். இங்கு ரூ.50 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலான பொம்மைகள் உள்ளன. 5 அங்குல உயரம் முதல் 5 அடி உயரம் வரை உள்ள பொம்மைகள் இருக்கின்றன. இந்த ஆண்டு பல புதிய வகையான பொம்மைகள் விற்பனைக்காக வந்து உள்ளன. மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தட்சிணா மூர்த்தி, அன்னபூரணி, சிவன் குடும்பம், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி உள்ளிட்ட பல்வேறு கடவுள் சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதே போன்று எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களின் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

47 வகை பொம்மைகள்

வயதான தாத்தா, பாட்டி பொம்மைகளும் விற்பனையாகி வருகின்றன. வளைகாப்பு, மீனாட்சி திருக்கல்யாணம், சீனிவாசர் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், சரவண பொய்கை, சிவபெருமான் புட்டுக்கு மண்சுமந்த கதையை விளக்கும் பொம்மை செட், விவசாயத்தை பிரதிபலிக்கும் பொம்மை செட்டு, காது குத்து விழா செட், முளைப்பாரி செட், கீதை உபதேசம் செட், சபரிமலை செட், கைலாய பார்வதம் செட், 18 சித்தர்கள் செட், மகாபிரதோஷம் செட், ஆழ்வார்கள் செட், லலிதாம்பிகை செட், நவக்கிரகம் செட், பஜனை செட் போன்ற 47 வகையான பொம்மைகள் செட்டுகள் விற்பனைக்காக வந்துள்ளன.

மக்கள் ஆர்வமுடன் கொலு பொம்மைகளை வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை. விற்பனை நன்றாக இருக்கிறது என்று கூறினார்.


Next Story