பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி 19-ந் தேதி சிவகங்கையில் நடக்கிறது
சிவகங்கையில் வருகிற 19-ந்தேதி பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடக்கிறது.
சிவகங்கையில் வருகிற 19-ந்தேதி பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடக்கிறது.
பேச்சுப்போட்டி
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 19-ந்தேதி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து கல்லூரிகளில் (அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள்) பயின்றுவரும் மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாக அரங்கில் நடத்தப்பட உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசுத்தொகையாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பெற உள்ளன.
தலைப்புகள்
பேச்சுப்போட்டி 19-ந்தேதி அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஒரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். 5 தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும். போட்டி தொடங்கும் நேரத்தில் மாணவர்கள் போட்டிக்குரிய தலைப்பினை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அந்த தலைப்பில் மட்டுமே பேச வேண்டும்.
மாவட்ட அளவிலான இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்பு படிவத்தை பூர்த்தி செய்து கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் ஒப்புதல் பெற்று சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்து பங்கேற்கலாம்.
கடந்த ஆண்டு பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பங்கேற்று முதல் பரிசுபெற்ற மாணவர்கள் இந்த ஆண்டு பங்கேற்க இயலாது. மேலும், விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.