பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குண்டு மல்லி பூவின் விலை 'கிடுகிடு' உயர்வு ஒரு கிலோ ரூ.2,000-க்கு விற்பனை


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குண்டு மல்லி பூவின் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ ரூ.2,000-க்கு விற்பனை
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூரில் குண்டு மல்லி பூவின் விலை ‘கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடலூர்

எத்தனை பூக்கள் இருந்தாலும் மல்லிகை பூவுக்கும், குண்டு மல்லி பூவுக்கும் இருக்கும் 'மவுசு' எந்த பூவுக்கும் இல்லை எனலாம். மல்லிகை பூவின் வாசனையும், அதன் வசீகரமும் ஆளை மயக்கும் தன்மை கொண்டவை. எந்த விழாவாக இருந்தாலும் அதில் மல்லிகை பூ முக்கிய அங்கம் வகிக்கும். பூக்களின் ராணியாக இருக்கும் மல்லிகை பூவுக்கு, அதிலும் மதுரை மல்லிக்கு தமிழகம் தாண்டி வெளிநாடுகளிலும் மவுசு அதிகம்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகை பூ, குண்டு மல்லி உள்பட அனைத்து பூக்களும் அதிக தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது வரத்து பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் மல்லிகை மற்றும் குண்டு மல்லி வரத்தும் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக குண்டு மல்லி மற்றும் மல்லிகை பூ விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது.

'கிடுகிடு' விலை உயர்வு

கடலூரை பொறுத்தவரை நாணமேடு, உச்சிமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் மல்லிகை, குண்டுமல்லி விற்பனைக்காக எடுத்து வரப்படுகிறது. தற்போது பனிக்காலம் என்பதால், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் வழக்கமான வரத்தும் குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவை அதிகம் இருக்கும் நிலையில் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் குண்டு மல்லி பூவின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது.

இதனால் 2 நாட்களுக்கு முன்பு ரூ.1,500 வரை விற்பனையான ஒரு கிலோ குண்டு மல்லி பூ, நேற்று ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ரூ.1200-க்கு விற்கப்பட்ட முல்லை பூ ரூ.1600-க்கும், ரூ.200-க்கு விற்பனையான ரோஜா ரூ.240-க்கும், சாமந்தி ரூ.160-ல் இருந்து ரூ.200-க்கும், கேந்தி ரூ.70-ல் இருந்து ரூ.80-க்கும், அரளி ரூ.320-ல் இருந்து ரூ.400-க்கும் விற்பனையாகிறது.

2 மடங்கு உயர்வு

இதேபோல் 'காக்கத்தான்' எனும் வாசமில்லா காட்டுமல்லி விலை 2 மடங்கு விலை உயர்ந்திருக்கிறது. அதாவது ரூ.550-ல் இருந்து ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மல்லிகை உள்பட அனைத்து பூக்களின் விலை இன்னும் உயரக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story