தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி


தமிழ்நாடு நாள் விழாவையொட்டி  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி
x

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 7-ந்தேதி கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்பேரில் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்த தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தேனி மாவட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 7-ந்தேதி தேனி மாவட்ட ஊராட்சிகள் கூட்டரங்கில் நடக்கிறது.

தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும், தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களும், தமிழ்நாட்டுக்காக உயிர்கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி., சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப் போர் தியாகிகள், கருணாநிதி உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடக்கிறது.

போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் அவர்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கலாம். போட்டிகளில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story