புத்தக திருவிழாவையொட்டி எழுத்தாணிக்கார தெருவில் 'மதுரை வாசிக்கிறது' நிகழ்ச்சி


புத்தக திருவிழாவையொட்டி எழுத்தாணிக்கார தெருவில் மதுரை வாசிக்கிறது நிகழ்ச்சி
x
தினத்தந்தி 6 Oct 2023 8:30 PM GMT (Updated: 6 Oct 2023 8:32 PM GMT)

மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் மதுரை வாசிக்கிறது நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

மதுரை

புத்தக திருவிழா

மதுரை தெற்கு மாசி வீதி, எழுத்தாணிக்கார தெருவில் மதுரை புத்தகத் திருவிழா-2023 நிகழ்வை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மதுரை வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார், மேயர் இந்திராணி ஆகியோர் தலைமை தாங்கினர். பூமிநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வெங்கடேசன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகின்ற 12-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழா என்பது வழக்கம் போல அரசு நடத்துகின்ற திருவிழா. இது ஒரு மாபெரும் பண்பாட்டு இயக்கம் என்பதை உணர்ந்து தான் மாநில அரசு கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக புத்தக திருவிழாவினை நடத்தி வருகிறது. புத்தக திருவிழாவின் முதல் நிகழ்வாக "மதுரை வாசிக்கிறது" என்ற விழிப்புணர்வு நிகழ்வினை எழுத்தாணிக்கார தெருவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சங்க அடையாளம்

எழுத்தை எழுத்தாணி கொண்டு ஏடுகளில் எழுதி மக்களுக்கு வழங்குகின்ற தொழில்களை செய்கின்ற மக்கள் வசித்த தெருதான் எழுத்தாணிக்காரத் தெரு. எனவேதான், இந்தியாவில் எழுத்து சார்ந்த அடையாளம், மிகப் பழமையான அடையாளத்தை கொண்ட தெருவாக எழுத்தாணிக்காரத் தெரு விளங்குகின்றது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தை அடையாளமாகக் கொண்ட தெருவும், அதிக எழுத்துக்களைக் கொண்ட நகரமாகவும் மதுரை விளங்குகின்றது. இதனால்தான் மதுரை மாவட்டத்தில் சிறப்பான எழுத்தும், இலக்கியமும், சங்கத்தமிழும் இருக்கின்றது.

மதுரை புத்தகத் திருவிழாவினை மாபெரும் வாசிப்பு இயக்கமாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு குடும்பமும், மாணவ-மாணவிகளும், வாசகர்களும், மனிதர்களும் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். தனக்கான புத்தகத்தோடு நினைவு கூர்கின்ற, வாசிக்கின்ற, பேசுகின்ற நாட்களாக இந்த நாட்கள் அமைய வேண்டும். அறிவுச் சமூகத்தை உருவாக்குகின்ற வாசல் தான் புத்தகத் திருவிழா.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story