மத்திய மந்திரி அமித்ஷா வருகையையொட்டிவேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு


மத்திய மந்திரி அமித்ஷா வருகையையொட்டிவேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
x

மத்திய மந்திரி அமித்ஷா ஹெலிகாப்டர் தரையிறங்கும் வேலூர் அப்துல்லாபுரம் விமானநிலையத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்

மத்திய மந்திரி அமித்ஷா ஹெலிகாப்டர் தரையிறங்கும் வேலூர் அப்துல்லாபுரம் விமானநிலையத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

பொதுக்கூட்டம்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரியில் பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய மந்திரிகள் அமித்ஷா, வி.கே.சிங், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேச உள்ளனர். இதற்காக அமித்ஷா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு வருகை தருகிறார். மாலை 2.30 மணியளவில் அமித்ஷா வரும் ஹெலிகாப்டர் வேலூர் அப்துல்லாபுரம் விமானநிலையத்தில் தரையிறங்க உள்ளது. அதையடுத்து அவர் அங்கிருந்து காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்கிறார்கள்.

உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் வருகையையொட்டி வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக பள்ளிகொண்டா, கந்தனேரி மற்றும் அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் இருந்து கூட்டம் நடைபெறும் பகுதி வரையிலான தேசிய நெடுஞ்சாலையோரம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே உள்ள மலை மற்றும் காடுகளில் துணை ராணுவத்தினர் மோப்பநாய், வெடிகுண்டு பிரிவு போலீசார் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் வேலூர் விமானநிலையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு குறித்து டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார்.

அப்போது அவர் ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம், அங்கிருந்து அமித்ஷா காருக்கு வரும் பகுதிகள் மற்றும் விமானநிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் கந்தனேரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அமித்ஷா வந்து செல்லும் வரையில் பணியில் இருக்கும் போலீசார் அனைவரும் உஷார்நிலையில் இருக்கும்படி டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன், கிரண்ஸ்ருதி, ஆல்பர்ட் ஜான், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உடனிருந்தனர்.

டிரோன்கள் பறக்க தடை

இதற்கிடையே மத்திய மந்திரி அமித்ஷா வருகையையொட்டி பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதிகளில் டிரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story