கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய நாளையொட்டி சிறப்பு புகைப்பட கண்காட்சி
கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய நாளையொட்டி சிறப்பு புகைப்பட கண்காட்சி நடந்தது.
தென்தாமரைக்குளம்:
உலக பாரம்பரிய நாளையொட்டி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் புகைப்பட கண்காட்சி நடந்தது. இதில் தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஷ்வரர் கோவில், நீலகிரி மலை ரெயில்வே ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் அவை பற்றிய விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன
கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி கூறுகையில், நம் முன்னோர்கள் விட்டு சென்ற பொருட்களும், இடங்களும் தான் நம் பாரம்பரிய சொத்துக்கள். அவற்றை நாம் பத்திரமாக பேணி பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வினை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இந்த கண்காட்சியின் நோக்கம். இந்த மாத இறுதி வரை கண்காட்சி நடைபெறும் என்றார்.
இந்த கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.