பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு
பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
பழனி-கொடைக்கானல் மலைப்பாதை
பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் கார், பஸ், வேன் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு அருகே 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
அதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்கள் சென்று வந்தன. எனினும் வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.
மீண்டும் மண்சரிவு
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே சவரிக்காடு அருகே மண்சரிவாகி மணல் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்ட மண்மூட்டைகள் சரிந்து விழுந்தன.
தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயபால் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு மீண்டும் மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தினர்.
தீவிர கண்காணிப்பு
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாதையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மலைப்பாதையில் மிதமானவேகத்தில் செல்லுமாறும், மலைப்பாதையில் ஆங்காங்கே நிறுத்தக்கூடாது எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.