வெண்டைக்காயை ஏரியில் கொட்டியவர் மீதுநடவடிக்கை
கந்திலி அருகே வெண்டைக்காயை ஏரியில் கொட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தீபா கூறினார்.
கந்திலி அருகே வெண்டைக்காயை ஏரியில் கொட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தீபா கூறினார்.
வெண்டைக்காய் விலை வீழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த மாணவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் வெண்டைக்காய்களை பயிர் செய்தும், சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் விவசாயிகளிடம் இருந்து விலைக்கு வாங்கியும் விற்பனை செய்து வருகிறார்.
இந்தநிலையில் வெண்டைக்காய் கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்வதாகவும், அதை வாங்கவும் ஆட்கள் இல்லை என கூறி சுமார் 5 டன் வெண்டைக்காய்களை கந்திலி அருகே உள்ள கள்ளேரி ஏரியில் கொட்டினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிகாரிகள் விசாரணை
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தீபா, கந்திலி வட்டார உதவி இயக்குனர் ஜீவிதா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணை குறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தீபா கூறியதாவது:-
வெண்டைக்காயை ஏரியில் கொட்டியவர் ஒரு வியாபாரி. அவர் விவசாயிகளிடம் இருந்து வெண்டைக்காய்களை வாங்கி அதை விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மாவட்ட உழவர் சந்தைகளில் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவர் ஏரியில் கொட்டிய வெண்டைக்காயில் பெரும்பாலானவை முற்றியவை. அதனால் யாரும் வெண்டைக்காய்களை வாங்காமல் இருந்திருக்கலாம். விளைபொருட்களை ஏரியில் கொட்டுவது சட்டப்படி தவறு. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.