கம்பத்தில்வைக்கோல் சுற்றும் எந்திரத்தை திருட முயற்சி:3 பேர் கைது
கம்பத்தில் வைக்கோல் சுற்றும் எந்திரத்தை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமன் (வயது 55). வைக்கோல் வியாபாரி. இவர், வைக்கோல் சுற்றும் எந்திரத்தை கம்பத்தில், காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள தனியார் நெல் களத்தில் நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் அந்த எந்திரத்தில் உள்ள 7 ரோலர்களை 3 பேர் கொண்ட கும்பல் கழற்றி ஆட்டோவில் ஏற்றி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை பரமன் கையும், களவுமாக பிடித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் (பொறுப்பு) தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோம்பை சாலை தெருவை சேர்ந்த ஞானேசன் (45), சுங்கம் தெருவை சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் (51), முகமது ரபீக் (51) என்பதும், வைக்கோல் சுற்றும் எந்திரத்தில் உள்ள 7 ரோலர்களை திருடி சரக்கு ஆட்டோவில் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானேசன், சுல்தான் இப்ராஹிம், முகமது ரபீக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோ, மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.