கம்பத்தில்இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி வீட்டில் திருட முயற்சி:மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கம்பத்தில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி வீட்டில் திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கம்பத்தில், சுருளிப்பட்டி சாலையில் உள்ள சின்ன வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் சந்திரசூடன். இவர், சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதனால் இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். கம்பத்தில் உள்ள இவரது வீடு மற்றும் தோட்டத்தினை ராயப்பன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 29) என்பவர் பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 9-ந்தேதி வழக்கம் போல் மாலை ஈஸ்வரன் வீட்டை பூட்டிவிட்டு ராயப்பன்பட்டிக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவையும் உடைத்துள்ளனர். ஆனால் பீரோவில் நகை, பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.