கம்பத்தில்சாலையில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோர் மீட்பு
கம்பத்தில் சாலையில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோர் 5 பேர் மீட்கப்பட்டனர்.
கம்பம் புதிய பஸ்நிலையம், வ.உ.சி. திடல், காந்திசிலை, பார்க்ரோடு, அரசு மருத்துவமனை, வாரச்சந்தை, மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில், மன நலம் பாதிப்பு மற்றும் ஆதரவற்றோர் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர். இவர்களில் சிலர் கையில் கம்பு, கற்கள் போன்றவற்றை வைத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தனர். மேலும் ஓட்டல், டீக்கடை, தெருவோர கடைகளில் வரும் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர்.
இந்நிலையில் கம்பத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் மன நலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற நபர்களை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், நேற்று கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் போலீசார் மற்றும் பெரியகுளம் அரசு மன நல காப்பக ஆலோசகர் சபரிநாதன் குழுவினர் கம்பம் பகுதியில் சுற்றி திரிந்த பெண் உள்பட 5 பேரை மீட்டனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி பெரியகுளம் அரசு மன நல காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து மனநல ஆலோசகர் கூறுகையில், மீட்கபட்ட நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு, அவர்களின் உறவினர்களை கண்டுபிடித்து ஒப்படைக்கப்படுவார்கள். உறவினர்கள் இல்லாத ஆதரவற்றோராக இருந்தால் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள் என்றார்.