கம்பத்தில்வியாபாரி வீட்டில் நகை-பணம் திருட்டு
கம்பத்தில் வியாபாரி வீட்டில் நகை-பணம் திருட்டுபோனது.
கம்பம் நாட்டுக்கல் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். அரிசி வியாபாரி. இவரது மனைவி வைரலட்சுமி. கடந்த 7-ந்தேதி லோகநாதன் அரிசி வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். வைரலட்சுமி வீட்டின் கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள நந்த கோபாலன் கோவிலுக்கு சென்றார். மீண்டும் மதியம் வீட்டிற்கு வைரலட்சுமி வந்தார். பின்னர் இரவு வைரலட்சுமி வழக்கம்போல் பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை, 15 கிராம் வைர நகைகள், ரூ.10 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா சம்பவ இடத்திற்கு சென்று வரலட்சுமி மற்றும் அவரது கணவர் லோகநாதன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், மர்ம நபர்கள் வீட்டின் வெளிப்புற மாடி படிக்கட்டின் வழியாக ஏறி உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு பீரோவின் அருகில் அதன் சாவி இருந்துள்ளது. இதனால் பீரோவை உடைக்காமலே அதில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மா்ம நபர்களை தேடி வருகின்றனர்.