தொடர் மழை காரணமாக சாலையில் சரிந்து விழுந்த பாறைகள்
தொடர்மழை காரணமாக ஏலகிரி மலை பாதையில் பாறைகள் சரிந்து விழுந்தன.
மரம் சாய்ந்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனால் குளம் மற்றும் கிணறுகள் நிரம்பி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக ஏலகிரிமலையில் உள்ள நிலாவூர் அருகே சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது.
அப்போது நிலாவூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அதிகாலை 5 மணியளவில் அரசு பஸ் வந்தது. சாலையில் மரம் சாய்ந்து கிடந்ததால், டிரைவர் பஸ்சை நிறுத்தி மரக்கிளைகளை அகற்றிக்கொண்டு பஸ்சை ஓட்டிச்சென்றார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சென்று சாலையோரம் சாய்ந்த மரத்தை அகற்றினர்.
பாறைகள் சரிந்தன
அதன் பிறகு நேற்று மதியம் ஏலகிரி மலை 9-வது கொண்டை ஊசி வளைவில் பாறைகற்கள் தொடர் மழையின் காரணமாக சாலையில் சரிந்து விழுந்தன. அதையும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர் மழை காரணமாக இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனத்துடன் கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.