திருவிழாக்களுக்கு எந்த அடிப்படையில் உள்ளூர் விடுமுறை? மதுரை ஐகோர்ட்டு கேள்வி


திருவிழாக்களுக்கு எந்த அடிப்படையில் உள்ளூர் விடுமுறை? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x

திருவிழாக்களுக்கு எந்த அடிப்படையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை,

கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வருகிற 6-ந் தேதி கும்பகோணம் மாசி மகாமக திருவிழா நடக்கிறது. இதற்காக கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோவில்கள், 5 பெருமாள் கோவில்களில் கொடியேற்றம் நடந்துள்ளது.

மாசி மகாமக திருவிழாவுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள்.

சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, உள்ளூர் விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2021-ம் ஆண்டில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் இதுவரை மாசி மகாமக திருவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை.

எனவே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கும்பகோணம் மாசி மகாமக திருவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளை மூடவும், உள்ளூர் விடுமுறை அளித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கேள்வி

அப்போது நீதிபதிகள், திருவிழாக்களையொட்டி உள்ளூர் விடுமுறை விடுவது மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடும் அதிகாரம் யாருக்கு உள்ளது? எந்த அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது? இதுதொடர்பான அரசாணைகள் நிலுவையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, அரசாணையின் அடிப்படையில் திருச்செந்தூர் கோவில் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதுடன், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. மதுரையிலும் இதே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன, என்றார்.

பின்னர் ஆஜரான அரசு வக்கீல், இதுகுறித்து தகவல் கேட்டு தெரிவிக்க அவகாசம் தர வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து இந்த வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story