விவசாய நிலங்களுக்கு நடுவில் கல்குவாரிக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
விவசாய நிலங்களுக்கு நடுவில் கல்குவாரிக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
விவசாய நிலங்களுக்கு நடுவில் கல்குவாரிக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
விவசாய நிலங்கள்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்த சக்திவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் கிராமமான கல்லணையில் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நடுவில் கல் மற்றும் கிராவல் குவாரி நடத்துவதற்கு நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு கனிம வள அதிகாரிகள் 10 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுள்ளனர்.
இந்த குவாரிக்கு அனுமதி அளிக்கும் போது கனிமவள சட்டத்தின் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை.
இதனால் குவாரி அருகில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மணல் அள்ளப்படுகிறது
அது மட்டுமில்லாமல் அருகில் உள்ள குண்டாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கேள்விக்குறியாகிவிட்டது. நீர்நிலைகளையும் இந்த குவாரி நிறுவனத்தினர் ஆக்கிரமித்து உள்ளனர்.
எனவே இந்த கல் மற்றும் கிராவல் குவாரி செயல்பட அனுமதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல்கள் எம்.சுந்தர் ஆஜராகி, கல்லணை ஊராட்சியில் விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 26.1.2023 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அதன் பேரில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
நீதிபதிகள் கேள்வி
பின்னர் நீதிபதிகள், விவசாய நிலங்களுக்கு இடையே குவாரிக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினர். விசாரணை முடிவில், இதுகுறித்து கனிமவளத்துறை அதிகாரிகள், மதுரை மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஜூன் மாதம் 5-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.