தர்மபுரி பகுதியில் கேரள மக்களின் வீடுகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
தர்மபுரி பகுதியில் கேரள மக்களின் வீடுகளில் ஓணம் பண்டிகையை பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர்.
ஓணம் பண்டிகை
தர்மபுரி பகுதியில் உள்ள கேரள மக்களின் வீடுகளில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி கேரள மக்கள் புத்தாடை அணிந்து அவரவர் வீடுகளில் சாமிக்கு பல்வேறு வகையான பழங்கள், உணவு வகைகள் படையலிட்டு வழிபட்டனர். வீடுகளில் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து கேரள விருந்து அளித்து ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். வழக்கமாக அனைத்து கேரள மக்களின் வீடுகளிலும் பெரிய அளவில் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்ததால் பெரும்பாலான வீடுகளில் சிறிய அளவில் மட்டுமே அத்தப்பூ கோலமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தர்மபுரி பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக முகூர்த்த சீசன் என்பதால் பூக்களின் விலை உச்சத்தை எட்டியது. குறிப்பாக மல்லிகை பூ கிலோ ரூ.4 ஆயிரத்து 500-க்கு விற்கப்பட்டது. இதேபோன்று பெரும்பாலான பூக்களின் விலையும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.