பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்-வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்


பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

கோயம்புத்தூர்

ெபாள்ளாச்சி

பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

ஓணம் பண்டிகை

மாவேலி மன்னர் ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் நாட்டை காண வருகிறார் என்பது ஐதீகம். அவரை வரவேற்க ஆண்டுதோறும் கேரள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். ஓணத்தையொட்டி வீட்டில் விருந்து தயார் செய்து உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினருக்கு கொடுப்பார்கள். மேலும் வீட்டின் முன் பல்வேறு வகையான வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். கேரளாவில் ஓணம் பண்டிகை ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வீடுகள் முன் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. கொரோனா முடிந்ததால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை களைகட்டியது. வெங்கடேசா காலனியில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதுகுறித்து பொள்ளாச்சியில் வசிக்கும் மலையாள மக்கள் கூறியதாவது:-

விருந்து கொடுத்து உற்சாகம்

ஆண்டுதோறும் ஓணம் பண்டிகைக்காக வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்து, பண்டிகையை கொண்டாடுவோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு, ஊரடங்கு காரணமாக யாரையும் வீட்டிற்கு அழைக்கவில்லை. மேலும் இங்கிருந்து கேரளாவுக்கும் செல்ல முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இங்கிருந்து சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. மேலும் பூக்கள் விலை அதிகமாக இருந்தும் மக்கள் அதிகமாக பூக்களை வாங்கி வீடுகளில் கோலமிட்டு பண்டிகையை கொண்டாடினார்கள். மேலும் உறவினர்கள், நண்பர்களை வீடுகளுக்கு அழைத்து ஓணத்தையொட்டி விருந்து கொடுத்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வால்பாறை

வால்பாறை பகுதியில் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வந்தனர். தங்களது வீடுகளில் 16 வகையான சைவ உணவுகளை சமைத்து உறவினர்கள் நண்பர்கள் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்தவர்களுடன் பகிர்ந்து உண்டு வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தனர். வால்பாறை வாழைத் தோட்டம் பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.


Next Story