நாகையில் 1½ கிலோ கஞ்சா பறிமுதல்
நாகையில் 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நாகையில் 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கஞ்சா கடத்தல்
நாகை தாமரைக்குளம் பகுதியில் கஞ்சா கடத்தல் நடப்பதாக 'உங்கள் எஸ்.பி.யுடன் பேசுங்கள்' செல்போன் எண்ணிற்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் 1½ கிலோ கஞ்சாவை கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் தனிப்படை போலீசார் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் மதுரை புதுசிறைச்சாலை பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது27), நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (28), அதே பகுதியை சேர்ந்த ஆதித்யன் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
200 மதுபாட்டில்கள் பறிமுதல்
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் நடத்திய சோதனையில் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த தென்னரசு (59) என்பவர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 90 மில்லி லிட்டர் அளவு கொண்ட 200 மதுபாட்டில்களை நாகையில் விற்பனை செய்ய மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தென்னரசுவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று பறிமுதல் செய்த கஞ்சா மற்றும் மதுபாட்டில்களை பார்வையிட்டார்.