ஒரே நாடு, ஒரே வரி என்பது நாட்டின் வளர்ச்சிக்கான குரல்


ஒரே நாடு, ஒரே வரி என்பது நாட்டின் வளர்ச்சிக்கான குரல்
x
தினத்தந்தி 2 July 2023 12:30 AM IST (Updated: 2 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஒரே நாடு, ஒரே வரி என்பது நாட்டின் வளர்ச்சிக்கான குரல்

கோயம்புத்தூர்

கோவை

ஒரே நாடு, ஒரே வரி என்பது தற்போது நாட்டின் வளர்ச்சிக்கான குரலாக மாறி உள்ளது என்று கோவை ஜி.எஸ்.டி. தின விழாவில் முன்னாள் கவர்னர் சதாசிவம் பேசினார்.

ஜி.எஸ்.டி. தின விழா

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தையொட்டி நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி. ஆணையரகத்தில் ஜி.எஸ்.டி. தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கோவை ஜி.எஸ்.டி. ஆணையரக முதன்மை ஆணையர் ஏ.ஆர்.எஸ்.குமார் தலைமை தாங்கினார்.

கூடுதல் ஆணையர் விஜயகிருஷ்ண வேலன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் கலந்து கொண்டு சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கி பேசும்போது கூறியதாவது:-

வளர்ச்சியின் குரல்

ஜி.எஸ்.டி. முறை நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் கருத்து வேறுபாடுகளையும், மத்திய அரசு, மாநில அரசு என்ற பாகுபாட்டையும் களைந்து நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு தொடர்பாக பொதுமக்கள் இடையே போதிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை கடந்த 2010-ம் ஆண்டிலேயே அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து இருந்தாலும் பல்வேறு இடையூறுகளை தாண்டி 2017-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. ஒரே நாடு, ஒரே வரி என்பது தற்போது நாட்டின் வளர்ச்சிக்கான குரலாக மாறி உள்ளது.

தீர்ப்புகள்

நான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருக்கும் போது ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பு கொடுத்தேன். மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை தடை செய்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக மாற்றியும், உடல் ஊனமுற்றோர் என்ற சொல்லை மாற்றுத்திறனாளிகள் என மாற்றியும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி இருந்தேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வணிக வரித்துறை இணை இயக்குனர் காயத்ரி கிருஷ்ணன், சக்தி குழும இயக்குனர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கூடுதல் ஆணையர் (தணிக்கை) ராஜஸ்ரீ நன்றி கூறினார்.



Next Story