ஒரு நாள், ஒரு நூல் வாசிப்பு இயக்கம்


ஒரு நாள், ஒரு நூல் வாசிப்பு இயக்கம்
x

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக, 729 பள்ளிகளில் ஒரு நாள், ஒரு நூல் வாசிப்பு இயக்கம் நேற்று தொடங்கியது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும், மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த வேண்டும், மாணவ பருவத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு சார்ந்த நூல்களை எளிதில் வாசித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என ஒரு நாள், ஒரு நூல் வாசிப்பு இயக்கம் என்ற நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.

இதனை தஞ்சை தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து புத்தகங்கள் வாசித்தார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல், நேர்முக உதவியாளர்கள் பழனிவேல் (மேல்நிலை), மாதவன் (இடைநிலை) மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

2 லட்சம் மாணவர்கள்

இதில் மாணவர்கள் அறிவியல், வரலாறு, இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் வாசித்தனர். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 729 பள்ளிகளில், சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த புத்தக வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்று ஒரு வார காலம் வாசிக்க உள்ளனர். ஒரு மணி நேரம் வாசித்தல் முடிந்த உடன் மாணவர்களுக்கு அதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அவர்களின் அறிவு திறனை மேம்படுத்தவும், வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இது அமையும். இவ்வாறு அவர் கூறினார்.




1 More update

Next Story