ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

தஞ்சை அருகே ரெயிலில் அடிபட்ட நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? என அடையாளம் தெரியாததால் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.
தஞ்சை அருகே ரெயிலில் அடிபட்ட நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? என அடையாளம் தெரியாததால் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.
ரெயிலில் அடிபட்டு பலி
தஞ்சை- திட்டைக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்ட நிலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர், .
மேலும் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. மேலும் இறந்தவர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு
இந்நிலையில் ரெயிலில் அடிப்பட்டு இறந்தவர் விவரங்கள் தெரியாததால் அவர் பற்றிய தகவலை சேகரிக்க ரெயில்வே போலீசார் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்தும், அவரின் அங்க அடையாளங்கள் குறித்தும் அறிவிப்பு செய்தனர். இறந்து கிடந்தவரின் விவரங்கள் தெரிந்தால் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.