வாகனம் மோதி ஒருவர் சாவு; உறவினர்கள் மறியல்


வாகனம் மோதி ஒருவர் சாவு; உறவினர்கள் மறியல்
x

வாகனம் மோதி ஒருவர் இறந்ததையடுத்து, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

கல்லக்குடி:

வாகனம் மோதியது

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், தாப்பாய் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(வயது 40). ஒலிப்பெருக்கி நிலையம் வைத்து தொழில் செய்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு புள்ளம்பாடியில் உள்ள சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். புள்ளம்பாடி-பாடாலூர் தேசிய நெடுஞ்சாலையில் புள்ளம்பாடி-தாப்பாய் கிராமங்களுக்கு இடையே குடிநீர் வடிகால் வாரிய குழாய்களின் சீரமைப்பு பணிக்காக, சாலையின் ஓரத்தில் குழி தோண்டி மண்ணை சாலையிலேயே குவித்து வைத்துள்ளனர்.

அப்பகுதியில் வந்தபோது அவர் மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் சேகர் பலத்த காயமடைந்தார். இதையறிந்த அவரது உறவினர்கள் அங்கு வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

மறியல்

இந்நிலையில் நேற்று மாலை சேகரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தாப்பாய் கிராமத்தில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சேகரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவர் மீது மோதிய வாகனத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தாப்பாய் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அதிவேகமாகவும், கூடுதல் எடையுடனும் மூலப்பொருட்களை கொண்டு செல்வதையும் கட்டுப்படுத்த வேண்டும், சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும், இதற்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த லால்குடி தாசில்தார் விக்னேஷ், போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு

இதற்கிடையே சேகர் விபத்தில் சிக்குவதற்கு முன்பு, சிறுகளப்பூரை சேர்ந்த வைரவேல்(50) என்பவர் வந்த வாகனம் அந்த இடத்தில் குவிந்திருந்த மண்ணில் சரிந்ததில், பலத்த காயமடைந்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இறந்த சேகருக்கு முதல் மனைவி மூலம் ரதிபிரியா(18) என்ற மகள் உள்ளார். முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் சரோஜினி என்பவரை 2-வதாக சேகர் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மூன்று மாதத்தில் தர்ஷினி என்ற கைக்குழந்தை உள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story