ஒரு லட்சம் பிளாஸ்டிக் டம்ளர் பறிமுதல்

பொள்ளாச்சியில் ஒரு லட்சம் பிளாஸ்டிக் டம்ளர்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் ஒரு லட்சம் பிளாஸ்டிக் டம்ளர்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் சோதனை
பொள்ளாச்சி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்தல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து, அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி ஜுபிளி கிணறு வீதியில் உள்ள ஒரு கடைக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் வந்து இறங்கி உள்ளதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து ஆணையாளர் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் முருகானந்தம் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த பார்சலை பிரித்து பார்த்த போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் இருப்பது தெரியவந்தது.
கடைக்காரருக்கு அபராதம்
இதை தொடர்ந்து 13 பெட்டிகளில் இருந்த ஒரு லட்சத்து 17 ஆயிரம் பிளாஸ்டிக் டம்ளர்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோவையில் இருந்து விற்பனைக்காக பொள்ளாச்சியில் உள்ள ஒரு கடைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அந்த கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்று தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






