ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசும் நிகழ்ச்சி
மலைப்பகுதிகளில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
வேலூர் வேலம்மாள் போதி கேம்பஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஆகியோர் இணைந்து ஒரு லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கினர். இந்த விதைப்பந்துகள் வேலூரை அடுத்த தீர்த்தகிரி மலைப்பகுதியில் வீசும் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. வேலம்மாள் போதி கேம்பஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் தலைமை தாங்கினார். வேலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன், பள்ளி முதல்வர் ஏ.ரதிக்குமாரி, வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் பாபு, வேலூர் தாசில்தார் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு விதைப்பந்துகளை மலையில் வீசி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் விதைப்பந்துகளை வீசினர். மேலும் வேலூர் மாவட்டத்தில் முதன்முறையாக டிரோன் மூலம் மலையின் பல்வேறு பகுதிகளில் விதைப்பந்துகள் வீசப்பட்டன.
இதுகுறித்து சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் மரங்கள் வளர காட்டுவாகை, சரக்கொன்றை, ஆலம், அரசமரம் உள்ளிட்ட 9 வகையான மரக்கன்றுகளின் விதைகள் பந்துகளாக உருவாக்கப்பட்டுள்ளன. அவை வேலூர் சத்துவாச்சாரி, செங்காநத்தம், பள்ளிகொண்டா, குடியாத்தம், கே.வி.குப்பம் உள்ளிட்ட 15 இடங்களில் உள்ள மலைகளில் அந்தப்பகுதி தன்னார்வலர்கள் மூலம் வீசப்பட உள்ளது என்றார்.