3 பேர் பலியான வழக்கில் மேலும் ஒருவர் கைது


தினத்தந்தி 3 Jun 2023 1:30 AM IST (Updated: 3 Jun 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கருமத்தம்பட்டி அருகே இரும்பு தூண்கள் உடைந்து விழுந்ததில் 3 பேர் பலியான வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி அருகே இரும்பு தூண்கள் உடைந்து விழுந்ததில் 3 பேர் பலியான வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விளம்பர பேனர்

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடந்தது.

இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்பு தூண்கள் அமைக்கப் பட்டன. அதில் பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான ஒப்பந்த பணியை சேலத்தை சேர்ந்த பாலாஜி, பழனிசாமி ஆகியோர் எடுத்து செய்து வந்தனர்.

உடைந்து விழுந்தது

அதில் பாலாஜியின் மேலாளர் அருண்குமார் மேற்பார்வையில் 7 தொழிலாளர்கள் இரும்பு தூண்களில் ஏறி விளம்பர பேனரை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இரும்புத்தூண் 60 அடி உயரமாக இருந்தபோதிலும் அதில் பாதுகாப்பு ஏற்பாடு ஏதும் செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென்று காற்று வீசியதால், இரும்பு கம்பிகள் உடைந்து விழுந்தன. இதனால் அந்த கம்பிகள் மீது நின்று வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்களும் அந்த இரும்பு தூண்களுடன் கீழே விழுந்தனர். இதில் அவர்கள் மீது இரும்பு தூண்கள் விழுந்து அமுக்கியது.

போலீசார் வழக்கு

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்த சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்முருகன் (வயது 38), குமார் (52), குணசேகரன் (52) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் விசார ணை நடத்தினர். இதில், விளம்பர பலகை அமைக்க எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அனுமதி இன்றி பேனர் அமைத்தல், பாதுகாப்பு உபகரணங்கள் அமைக்காதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலாஜி, பழனிசாமி, அருண்குமார் மற்றும் நில உரிமையாளர் ராமசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் ஒருவர் கைது

இதையடுத்து நேற்று முன்தினம் ஒப்பந்ததாரர் பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரரின் மேலாளர் அருண்குமாரை (27) போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பாலாஜி, நில உரிமையாளர் ராமசாமி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் அந்த இடத்தில் விளம்பர பேனர் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதால், அதை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அங்கு சரிந்து கிடந்த இரும்பு தூண்கள், விளம்பர பலகை அனைத்தும் அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட்டது.


Next Story