அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்


அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளாா்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்.கவுதமசிகாமணி எம்.பி., கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாத், ராஜமகேந்திரன் ஆகிய 6 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் நேற்று புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர், பொன்.கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆகிய இருவருக்கும் குத்தகைக்கு நிலம் கொடுத்ததாகவும், ஆனால் இவ்வழக்கு சம்பந்தமாக தனக்கு வேறு எதுவும் தெரியாது என்றுகூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார். பின்னர் அவரிடம் அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் குறுக்கு விசாரணை செய்தார். தொடர்ந்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கு விசாரணை மீண்டும் நாளை (அதாவது இன்று) நடைபெறும் என நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். இவ்வழக்கில் இதுவரை 11 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் அதில் 9 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் இவ்வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story