சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கொலை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மகன் சாமிநாதன் (வயது 37). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரது தங்கை தையல்நாயகிக்கும், அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவருக்கும் தா.பழூர்-ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அணைக்குடம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, சாமிநாதன் திருமண மண்டபத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று தனது செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.
6 பேர் சரண்
இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், வக்கீல் சாமிநாதனை கொலை செய்ததாக திருவையாறு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 6 பேர் சரணடைந்தனர். மேலும் 4 பேரை தா.பழூர் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் தஞ்சாவூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இவர்களிடம் போலீசார் விசாரணை செய்த போது கடந்த 2020-ம் ஆண்டு நாச்சியார் கோவில் பகுதியை சேர்ந்த கறிக்கடைக்காரர் செல்வமணி என்பவரின் கொலைக்கு பழி வாங்குவதற்காகவே சாமிநாதனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
கைது
மேலும், இந்த கொைல வழக்கில் மூளையாக செயல்பட்ட கறிக்கடைக்காரர் செல்வமணியின் தம்பி இளையராஜாவை (40) தா.பழூர் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.