காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காங்கிரஸ் நிர்வாகி

குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் காரவிளையை சேர்ந்தவர் லாசர் (வயது 62), சோடா கம்பெனி நடத்தி வந்தார். பின்னர், வயது முதிர்வு காரணமாக வீட்டில் இருந்து வந்தார். மேலும், இவர் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவரும் குளச்சல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த செல்லப்பன் (65), கூத்தாவிளையை சேர்ந்த தேவதாஸ் (48) ஆகியோரும் நண்பர்கள். கடந்த 5-ந்தேதி இரவு லாசர் குளச்சலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அருகில் உள்ள டீக்கடை பகுதியில் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சாவு

இதில் ஆத்திரமடைந்த செல்லப்பன், தேவதாஸ் ஆகிய 2 பேரும் தகாத வார்த்தையால் பேசி லாசரை கீழே தள்ளிவிட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த லாசர் நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 12-ந் தேதி லாசர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து குளச்சல் போலீசார் இந்த வழக்ைக கொலை வழக்காக மாற்றி செல்லப்பன், தேவதாஸ் ஆகிய 2 பேரையும் தேடி வந்தனர். இந்தநிலையில் தேவதாஸ் கடந்த 2 தினங்களுக்கு முன்பு குளச்சல் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

மேலும் ஒரு நண்பர் கைது

தலைமறைவாகி இருந்த மற்றொரு நண்பர் செல்லப்பனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அவரை அஞ்சுகிராமத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story