விஷ சாராயம் குடித்தவர்களில் மேலும் ஒருவர் சாவு
மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்தவர்களில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுவரை 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு விற்கப்பட்ட தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை 70-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்துள்ளனர். இவர்களுக்கு அன்று இரவே வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தனர்.
உடனே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை, பிம்ஸ் மருத்துவமனை, கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனை, மரக்காணம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி 13 பேர் பலியானார்கள்.
போராட்டம்
மேலும் கிளியனூர் அருகே கோவடியை சேர்ந்த சரவணன் (வயது 58) என்பவர் மரக்காணம் அரசு மருத்துவமனையில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது வரும் வழியிலேயே இறந்தார்.
அவர் விஷ சாராயம் குடித்ததால் இறந்துவிட்டதாக கூறி அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் சரவணனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் விஷ சாராயம் குடிக்கவில்லை என்பது தெரியவந்ததால் விஷ சாராய பலி எண்ணிக்கையில் அவரது இறப்பு சேர்க்கப்படவில்லை.
மேலும் ஒருவர் சாவு
இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த மரக்காணம் செல்லன் தெருவை சேர்ந்த காத்தவராயன் மகன் கன்னியப்பன் (48) என்பவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரோடு சேர்த்து இதுவரை விஷ சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
விஷ சாராயம் குடித்தவர்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை முடிந்து ஏற்கனவே முண்டியம்பாக்கத்தில் இருந்து 7 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து ஒருவரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இருந்து ஒருவரும் வீடு திரும்பியுள்ள நிலையில் நேற்று மேலும் 15 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
38 பேருக்கு தீவிர சிகிச்சை
தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 27 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 5 பேரும், மரக்காணம் அரசு மருத்துவமனையில் 6 பேரும் ஆக மொத்தம் 38 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.