மேலும் ஒரு தொழிலாளி பலி
மேலும் ஒரு தொழிலாளி பலி
மலுமிச்சம்பட்டி
கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் வெல்டிங் வைத்த போது டேங்கர் லாரி வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலியானார்.
டேங்கர் லாரி
கோவை மலுமிச்சம்பட்டி போடிபாளையம் ரோட்டில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஒர்ஷாப் உள்ளது. இங்கு டேங்கர் லாரிகள் பழுதுபார்க்கும் பணிக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் கார்த்திகேயன் என்பவர் தனக்கு சொந்தமான டேங்கர் லாரியை தண்ணீர் லாரியாக மாற்றும் பணி நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ் கஞ்சி மாவட்டத்தை சேர்ந்த ஒகில் (வயது 38), ரவி (19) ஆகிய இருவரும் ஈடுபட்டனர். டேங்கர் லாரியின் மூடியை திறக்க முடியவில்லை. இதையடுத்து அதனனை வெல்டிங் வைத்து அகற்ற முடிவு செய்தனர்.
வெடித்தது
சம்பவத்தன்று ஒகில் லரியின் மீது ஏறி வெல்டிங் மூலம் டேங்கர் லாரியின் மூடியை அகற்ற முயன்றார். அப்போது மூடியில் வைக்கப்பட்டி வெல்டிங்கினால் ஏற்பட்ட தீபொறி பரவியதில் அந்த டேங்கர் லாரி பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே ஒகில் பரிதாபமாக இறந்தார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் காயத்துடன் போராடிய ரவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது. இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.