மின்சாரம் தாக்கி ஒருவர் பலி தாய் படுகாயம்
திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி தாய் படுகாயம்
திண்டிவனம்
திண்டிவனம் அடுத்த ஓங்கூர் குளக்கரை தெருவை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 52). இவரது தாய் முனியம்மாள்(75). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது லேசான காற்றுடன் மழை பெய்தது. இதில் மின்கம்பத்திலிருந்து வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயர் அறுந்து கீழே விழுந்தது. இதை கவனிக்காமல் வெளியில் சென்ற முனியம்மாள் அறுந்து கிடந்த மின் ஒயரை காலால் மிதித்ததால் மின்சாரம் தாக்கி அவர் கூச்சல் எழுப்பியபடி மயங்கி விழுந்தார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த ஏழுமலையும் அறுந்து கிடந்த மின் ஒயரை காலால் மிதித்ததால் அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஏழுமலை பரிதாபமாக இறந்தார். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் முனியம்மாள் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.