பரமக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய ஒரு வாரம் 'கெடு'
பரமக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய ஒரு வாரம் ‘கெடு' விதித்து அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ்நிலையத்தின் அருகில் மாதவன் நகர் செல்லும் வழியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகில் வணிக வளாகம், திருமண மண்டபம் உள்ளிட்டவைகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். எனவே டாஸ்மாக் கடை அருகில் உள்ள பாரில் மது அருந்திவிட்டு வருபவர்கள் இந்த பகுதியில் போதையில் தள்ளாடி, மயங்கி விழுவது அடிக்கடி நடக்கிறது.
இதனால் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் ஆரூன் ரஷித் ஆஜராகி, இந்த டாஸ்மாக் கடையை 3 மாதத்தில் இடமாற்றம் செய்வதாக கடந்த மார்ச் மாதம் நடந்த அமைதி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதாடினார்.
இதை கேட்ட நீதிபதிகள், டாஸ்மாக் கடையை இங்கிருந்து மாற்றம் செய்ய வேறொரு இடத்தை ஒரு வாரத்தில் தேர்வு செய்து, இந்த கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.