மெட்ரோ ரெயில் பணி காரணமாக மயிலாப்பூரில் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம் - நாளை முதல் அமல்


மெட்ரோ ரெயில் பணி காரணமாக மயிலாப்பூரில் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம் - நாளை முதல் அமல்
x

மெட்ரோ ரெயில் பணி காரணமாக மயிலாப்பூரில் நாளை முதல் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னை கச்சேரி சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுவதால், கச்சேரி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 10-ந்தேதி (நாளை) முதல் வருகிற 16-ந்தேதி வரையிலான ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

* முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் செல்வதைக்கட்டுப்படுத்தி கல்வி வாரு தெருவில் தற்போதுள்ள ஒரு வழி பாதை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு வாகனங்கள் கச்சேரி சாலையில் இருந்து முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவுக்கு அனுமதிக்கப்படும்.

*லஸ் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலையை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டு, கல்வி வாரு தெரு, முண்டக்கன்னி அம்மன் கோவில் தெரு மற்றும் பஜார் சாலை வழியாக செல்லலாம்.

* சாந்தோம் நெடுஞ்சாலையிலிருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டு தேவடி தெரு, நடு தெரு மற்றும் ஆர்.கே.மட் சாலை (அல்லது) மாதா சர்ச் சாலை வழியாகவும் செல்லலாம்.

* மாநகர பஸ் 12-பி லஸ் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலை வழியாக போர்ஷோர் எஸ்டேட் பஸ் நிலையம் செல்ல தடைசெய்யப்பட்டு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும் திரும்பி வரும்போது, வி.எம். தெரு வரை வழக்கம் போல் வந்து டி.டி.கே. சாலை வழியாக செல்லலாம்.

* மாநகர பஸ் 12-எக்ஸ் லஸ் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலை வழியாக போர்ஷோர் எஸ்டேட் பஸ் நிலையம் செல்ல தடை செய்யப்பட்டு, ஆர்.கே.மட் சாலை மற்றும் தெற்கு கால்வாய் கரை சாலை வழியாகவும் திரும்பி வரும்போது மந்தைவெளி பஸ் நிறுத்தம் வரை வழக்கம் போல் வந்து வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும் ஆர்.கே.மட் சாலை வழியாக செல்லலாம்.

மேற்கண்ட தகவல் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story