2 பேருக்கு தலா ஓராண்டு சிறை
ஆடு திருட முயன்ற 2 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஆடு திருட்டு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள அரசநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊனாங்கல்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது38). விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். அவற்றை வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து வைத்து இருந்தார். கடந்த மே மாதம் 8-ந் தேதி பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடு சத்தம் போட்டது. எனவே சந்தேகம் அடைந்த ரவிக்குமார் வெளியே வந்து பார்த்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஆடுகளை திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஊர்பொதுமக்கள் உதவியுடன் ஆடு திருட முயன்றதாக மணியங்காளிப்பட்டியை சேர்ந்த பாண்டியன் (30), நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மணிமுத்து (25) உள்பட 3 பேரை பிடித்து மோகனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
ஓராண்டு சிறை
இது தொடர்பான வழக்கு நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாண்டியன், மணிமுத்து ஆகிய 2 பேருக்கும் மாஜிஸ்திரேட்டு விஸ்வநாதன் தலா ஓராண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.