கை நிறைய நாணயங்களுடன் நெஞ்சு முழுவதும் ஆசைகளை சுமந்த காதலர்களின் தூதுவனாக இருந்த ஒரு ரூபாய் காயின் பாக்ஸ்
காதலர்களின் தூதுவனாக இருந்த ஒரு ரூபாய் காயின் பாக்ஸ்
திருப்பூர்
ஒரு காலத்தில் நல்ல வசதி படைத்தவர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மட்டுமே தொலைபேசி என்பதை பார்க்க முடியும். நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அவசரத்திற்கு உறவினர்களிடம் பேச வேண்டுமென்றால் அருகில் தொலைபேசி உள்ள வீட்டு எண்ணை கொடுத்து அதன் மூலமாகவே உறவினர்களிடமும், குடும்பத்தினரிடமும் பேசி வந்தனர். இதன் பின்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அலைபேசி என்கிற செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த செல்போனையும் தொழிலதிபர்களும், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய அளவிற்கு இருந்தது. இதனால் தொலைபேசியும் சரி, அலைபேசியும் சரி ஏழை மற்றும் சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வந்தது.
இந்த நிலையில்தான் ஒரு ரூபாய் காயின் பாக்ஸ் என்ற எளிமையான ஒரு தொலைதொடர்பு வசதி கொண்டு வரப்பட்டது. அந்த காயின் பாக்ஸ்அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு என்று சொல்லக்கூடிய அளவிற்கு இல்லாமல் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையிலேயே அது அமைந்தது.
காயின் பாக்ஸ் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றதாலும், அதன் பயன்பாடு மிகவும் அதிகமாக இருந்ததாலும் பெட்டிக்கடை முதல் பேன்சி கடை, ஸ்டேசனரி கடை, ஓட்டல்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகள் என திரும்பிய திசையெல்லாம் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கக்கூடிய வகையில் ஒரு ரூபாய் காயின் பாக்ஸ் அதிக அளவில் காணப்பட்டது. ஒரு கடையில் 5, 6 காயின் பாக்ஸ்கள் இருந்தது என்று கூட சொல்லாம்.
குடும்பத்தில் யாராவது வெளியூர்களில் இருந்தால் அவர்களை யார், எந்த நேரத்திலும் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையிலும் இந்த காயின் பாக்ஸ் பேருதவியாக இருந்து வந்தது. அந்த காலக்கட்டத்தில் காதலர்கள் பலர் இந்த காயின் பாக்ஸ் மூலமாக பேசியே தங்களது தெய்வீகக் காதலை வளர்த்தார்கள் என்று கூட சொல்லலாம். இதேபோல் கடன் வாங்கிய ஒருசிலர் கடனை கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் சூழலில், அவர்களை பொறி வைத்து பிடிக்கவும் இந்த காயின் பாக்ஸ்தான் உதவியாக இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது அகில உலகத்தையும் அடிமையாக்கி, அடக்கி ஆளும் அலைபேசி (செல்போன்) அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் ஒரு பிரபல தனியார் நிறுவனம் சார்பில் 500 ரூபாய்க்கு செல்போன் என்ற நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு பல்வேறு பிராண்டுகளில் செல்போன்களை சந்தைப்படுத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து தனியார் நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களது பங்கிற்கு சிம்கார்டுகளை மலிவு விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் விளைவாக ஒரு ரூபாய் காயின் பாக்ஸ் பயன்பாடும், எண்ணிக்கையும் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்த நேரத்திலும் கூட பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, மாணவர்கள்-பெற்றோர் அவசர தகவல் பரிமாற்றத்திற்கு பள்ளிகளின் நேரடி கண்காணிப்பில் ஒரு ரூபாய் காயின் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டிருந்தது.
நாளடைவில் அதுவும் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து வணிக ரீதியாக ஒரு ரூபாய் காயின் பாக்ஸ் வைத்திருந்த கடை உரிமையாளர்கள் கூறும்போது, காயின் பாக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. எங்களுக்கும் கணிசமான லாபம் கிடைத்தது. நாளடைவில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக காயின் பாக்ஸ் பயன்பாடு குறைந்தது. இதைத் தொடர்ந்து ஒரு கடையில் 5 பாக்ஸ் இருந்தால் அதை இரண்டாக குறைத்தோம். இந்த சூழலில் காயின் பாக்ஸ்க்குரிய சேவை கட்டணத்தை நெட்வொர்க் நிறுவனங்கள் அதிகமாக்கின.
இதனால் கடை உரிமையாளர்களுக்கு லாபமே இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் 1, 2 வைத்திருந்த காயின் பாக்ஸ்களையும் கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு கடை உரிமையாளர்கள் வந்து விட்டோம். ஒரு குறிப்பட்ட காலத்திற்கு பிறகு காயின் பாக்ஸ் பயன்பாடு முற்றிலுமாக இல்லாத நிலை ஏற்பட்டு, ஒருசில கடைகளில் அந்த பாக்ஸ் காட்சிப் பொருளாகவே உள்ளன என்று தெரிவித்தனர். படிக்காத பாமர மக்கள் முதல் பலகோடிக்கு சொந்தக்காரர்களான தொழிலதிபர்கள் வரை தங்களது பொருளாதார நிலைக்கேற்ப செல்போன்களை வைத்துள்ளனர்.
10 பேரில் ஒருவர் கூட செல்போன் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்ற அளவிற்கு அனைவரும் செல்போன் பயன்படுத்தக் கூடியவர்களாக மாறி விட்டனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மாறுதல் ஏற்படும். அந்த வகையில் ஒரு கால கட்டத்தில் மஞ்சள் நிற ஒரு ரூபாய் காயின் பாக்ஸ் பயன்பாடு உச்சத்தில் இருந்த நிலையில், அதை ஓரத்திற்கு ஒதுக்கி தள்ளி பெரும் சக்தியாக உருவெடுத்தது செல்போன்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.