ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிவு


ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிவு
x

கோட்டூர் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருவாரூர்

எண்ணெய் கிணறு

காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதித்து எண்ணெய் எடுக்கும் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படுத்தி வந்தது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்த எண்ணெய் கிணறுகளை ஓ.என்.ஜி.சி நிறுவனம் மூடியது.

மூடப்பட்டது

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சேந்தமங்கலம் ஊராட்சி பெரியக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2 எண்ணெய் கிணறுகளை அமைத்து இருந்தது.

இதில் ஒரு கிணற்றில் 2013-ம் ஆண்டு அதிக அழுத்தம் காரணமாக கியாஸ் வெளியேறியது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து இந்த எண்ணெய் கிணறுகள் மூடப்பட்டது.

கியாஸ் கசிவு

இந்த நிலையில் பெரியக்குடி கிராமத்தில் மூடப்பட்ட ஒரு எண்ணெய் கிணற்றில் இருந்து நேற்று அதிகளவில் கியாஸ் கசிந்தது. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிந்து வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கியாஸ் வெளியேறும் பகுதியினை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story