தர்மபுரி உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை உயர்வு
தர்மபுரி:
சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்து வருகிறது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ 70- க்கு விற்பனையானது.
சின்ன வெங்காயம்
அன்றாட சமையலில் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களில் ஒன்றாக சின்ன வெங்காயம் உள்ளது. சின்ன வெங்காயத்தில் உடல் நலத்துக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. இதனால் சாம்பார், குழம்பு, கூட்டு, பொறியல் உள்ளிட்ட பல்வேறு உணவுகளில் சின்ன வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் பல்வேறு வகையான அசைவ உணவு வகைகள் தயாரிக்கப்படும் போது அதில் சின்ன வெங்காயம் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயத்திற்கான தேவை அனைத்து நாட்களிலும் உள்ளது.
விலை ஏறுமுகம்
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தின் மத்தியில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை இருந்தது. கோடை வெயில் காலம் முடிந்த பின்பும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடந்த சில வாரங்களில் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து வழக்கத்தை விட குறைந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை ரூ.60 ஆக உயர்ந்தது. தொடர்ச்சியாக சின்ன வெங்காயத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது.
ரூ.70- க்குவிற்பனை
நேற்று தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.70- க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.80 முதல் ரூ.85 வரை பல்வேறு விலைகளில் சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது இதன் காரணமாக வீடுகளில் அதிக அளவில் சின்ன வெங்காயத்தை வாங்கி பயன்படுத்துபவர்கள் வாங்கும் அளவை சற்று குறைத்துள்ளனர். சந்தைக்கு வரத்து அதிகரிக்கும்போது சின்ன வெங்காயத்தின் விலை குறையும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.