தொடர் மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிப்பு
வெண்ணந்தூர் பகுதியில் தொடர் மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
வெண்ணந்தூர்
வெண்ணந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நடுப்பட்டி, சவுதாபுரம், நாச்சிப்பட்டி அளவாய்ப்பட்டி, அத்தனூர், சப்பையாபுரம் மற்றும் மின்னக்கல் ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டுள்ளனர். இந்தநிலையில் விவசாயிகள் எதிர்பார்த்தது போல் நல்ல மழை பெய்ததால் வெங்காய விளைச்சல் அதிகரித்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் வெங்காய வயல்களில் மழைநீர் தேங்கி வெங்காயம் அழுகும் நிலை உருவாகி கோழிக்கால் என்னும் திருகல் நோய் வரத் தொடங்கியுள்ளது. மேலும் நடப்பட்ட வெங்காயத்தின் தோல்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து நடுப்பட்டி விவசாயி கூறுகையில், தற்போது ஒரு ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிர் செய்ய மட்டும் ரூ.40 ஆயிரம் செலவாகிறது. ஆனால் தற்போது வெங்காயம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் வெங்காயம் நடவு செய்து ஒரு மாதத்திலேயே அதிக நோய் பாதிக்கப்பட்டு முற்றிலும் அழியும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மழைக்காலங்களில் உருவாகும் திருகல் நோய்க்கு உரிய மருந்து கண்டுபிடித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.