விலையை கேட்டதும் கண்ணீர் வரவைக்கும் சின்ன வெங்காயம்


விலையை கேட்டதும் கண்ணீர் வரவைக்கும் சின்ன வெங்காயம்
x
தினத்தந்தி 30 Jun 2023 3:50 PM GMT (Updated: 2 July 2023 10:18 AM GMT)

ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவதால் வெங்காயத்தின் விலையை கேட்டதும் கண்ணீர் வரவைக்கிறது.

திருப்பூர்

பொதுவாக வெங்காயத்தை உரிக்கும் போது தான் கண்ணில் கண்ணீர் வரும். ஆனால் தற்போது சின்ன வெங்காயம் விலையில் சதமடித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவதால் அதன் விலையை கேட்டதுமே பலருக்கு கண்ணீர் வருகிறது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

பெரும்பாலான சமையல்களில் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் சமையலின் சுவையை அதிகரிக்க செய்வதற்கு சின்ன வெங்காயத்தை பயன்படுத்துவது வழக்கம். இப்படிப்பட்ட நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை எப்போது எப்படி இருக்கும் என்று ெதரியாது. சில நேரங்களில் மகிழ்ச்சி தருவதாகவும், சில நேரங்களில் கவலை தருவதாகவும் அமைந்து விடும்.

திருப்பூரில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 5 கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே 3 மாதங்களுக்கு முன்பு 3 கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.60 என மாறியது. தற்போது கடந்த சில தினங்களாக ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே தக்காளியின் விலை அதிகமாக உள்ள நிலையில் தற்போது வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விற்பனை சரிவு

இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த சாலையோர வெங்காய வியாபாரி கூறும்போது, திருப்பூருக்கு அவினாசி, சேவூர், பல்லடம், ஜல்லிப்பட்டி, பொங்கலூர், கொடுவாய் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து அதிக அளவில் சின்ன வெங்காயம் வரும். ஆனால் தற்போது உள்ளூர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து திருப்பூருக்கு வெங்காயம் வருகிறது. அதுவும் போதுமான அளவில் இல்லை என்பதால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

தரமான வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், இரண்டாம் ரகம் ரூ.60 முதல் ரூ.80 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சின்ன வெங்காயம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது. பெரும்பாலானோர் சின்ன வெங்காயத்திற்கு பதில் பெரிய வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story