சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கியது


சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கியது
x
தினத்தந்தி 20 Jun 2023 12:15 AM IST (Updated: 20 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொண்டாமுத்தூர் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கி இருக்கிறது.

கோயம்புத்தூர்

தொண்டாமுத்தூர்

தொண்டாமுத்தூர் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கி இருக்கிறது.

சின்ன வெங்காயம்

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அருகே தொண்டாமுத்தூர் மற்றும் செம்மேடு, நரசீபுரம், போளுவாம்பட்டி, மாதம்பட்டி, காளம்பாளையம், குப்பேபாளையம், கரடிமடை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருக்கிறது.

இங்கு பருவநிலைக்கு சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து கடைசி வாரம் வரை சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும்.

அதன்படி தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் அந்த பகுதியில் சின்ன வெங்காயம் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து காளம்பாளையத்தை சேர்ந்த விவசாயி நாராயணன் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும். சின்ன வெங்காயத்துக்கு அதிக மழை பெய்யக் கூடாது. பனியும் அதிகமாக இருக்கக்கூடாது. சாரல் மழை இருந்தால் மட்டும் போதும். பயிர் நன்றாக வளரும்.

10 ஆயிரம் ஏக்கர்

வழக்கமாக ஜூன் முதல் வாரத்திலேயே சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக பருவமழை தொடங்கி இருப்பதால் சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலும் விதை மூலம் சாகுபடி செய்யப்படும்.

எனவே துறையூரில் கிலோ ரூ.60-க்கு சின்னவெங்காயம் விதை வாங்கி வந்து சாகுபடி செய்யப்படுகிறது.

சாகுபடி முதல் அறுவடை வரை விதை, உரம், ஆட்கூலி உள்பட ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு ஆகிறது.

எவ்வித இயற்கை சீற்றமும் இல்லாமல் இருந்து நல்ல விளைச்சல்கிடைத்தால் ஏக்கருக்கு 5 டன் வரை மகசூல் கிடைக்கும்.

தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.50 கிடைத்தாலே லாபம் கிடைக்கும். கடந்த ஆண்டில் கிலோ ரூ.30-க்கும் குறைவாக விற்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

விலை நிர்ணயம்

பெரும்பாலான நேரத்தில் விலை குறைவாகதான் இருக்கிறது. இந்த நிலை நீடித்தால், சின்ன வெங்காயம் சாகுபடி செய்வது குறைந்துவிடும். எனவே விவசாயிகளுக்கு சீரான விலை கிடைக்க விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

அத்துடன் அரசே விவசாயி களிடம் இருந்து சின்ன வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்தால் பயனாக இருக்கும். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story