விலை உயர்ந்தது வெங்காயம்... உயருமா தக்காளி..?
-
சின்ன வெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், தக்காளி விலை உயருமா என்று விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
தொடர் நஷ்டம்
குறுகிய காலத்தில் வருவாய் ஈட்டக்கூடிய காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால் சமீப காலங்களாக காய்கறிகள் சாகுபடியும் விவசாயிகளை கண்ணீர் விட வைக்கும் ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக தக்காளி சாகுபடியில் தொடர் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருவது விவசாயிகளுக்கு ஆறுதலளித்துள்ளது.தக்காளி விலையில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஏற்றம் காணவில்லை என்பது விவசாயிகளின் வேதனையாக உள்ளது.
ஆதார விலை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- வறட்சி, இயற்கை சீற்றம், நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் காய்கறிகள் வரத்து குறையும் போது விலை தாறுமாறாக உயர்கிறது.ஆனால் பெரும்பாலான விவசாயிகள் பயிர் பாதிப்பை சந்தித்திருக்கும் நிலையில், விலை உயர்வின் மூலம் ஒருசில விவசாயிகள் மட்டுமே பயனடையும் நிலை உள்ளது.வரத்து அதிகரிக்கும் காலங்களில் கடும் விலை சரிவால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்.இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் காய்கறிகளின் விலை அளவுக்கதிகமாக உயரும்போது பொதுமக்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக குறைந்த விலையில் வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது.அதுபோல அளவுக்கதிகமாக குறையும்போது விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் அரசு ஆதார விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும்.தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து அதிகரிக்கும் காலங்களிலும் சீரான விலை கிடைக்கும் வகையில் மதிப்புக்கூட்டும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மழை பாதிப்பு
தற்போதைய நிலையில் சின்ன வெங்காயம் சாகுபடி என்பது அதிக செலவு பிடிக்கும் சாகுபடியாக மாறி விட்டது.வெங்காய விதைகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.அத்துடன் உழவு, உரம், மருந்து, கூலி என ஏக்கருக்கு 1 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.தற்போதைய நிலையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 85 வரை விலை போவது மகிழ்ச்சியளிக்கிறது.ஆனால் அதுகுறித்து அதிக அளவில் விமர்சனங்கள் முன் வைக்கப்படுவது வேதனையளிக்கிறது.மேலும் அறுவடைப் பருவத்திலிருக்கும் சின்ன வெங்காயப் பயிர்கள் மழையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.தற்போது வரை தக்காளிக்கு போதிய விலை கிடைக்காமல் சாலையோரங்களில் கொட்டும் அவலம் தொடர்கிறது.14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 120 வரையே விற்பனையாகிறது.இனி வரும் நாட்களில் மழை பாதிப்பால் வரத்து குறைந்து விலை உயரக்கூடும்.ஆனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பலன் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.