ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?


ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?
x

ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா? என பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நாமக்கல்

'எத்தனை நாளா சொல்கிறேன், கடைசி தேதி வரைக்கும் இருக்காதீங்கனு, ரீடிங் எடுத்த உடனேயே போய் பணத்தை கட்டுங்க, கட்டுங்கன்னு சொன்னா கேட்டாத்தானே!'

'நம்ம வீட்டுக்கு கரண்ட் பில் கட்ட இன்றைக்குத்தான் கடைசி நாளு, சாயந்திரத்துக்கு உள்ள பணத்தை கட்டலைனா, பியூசை புடுங்கிட்டு போய்விடுவாங்க, பிறகு இருட்டுலதான் கிடக்கணும். புரியாத மனுஷனா இருக்கிறாரே!'

இப்படி பல இல்லங்களில் இல்லத்தரசிகள் கணவன்மார்களை கடிந்துகொள்வதைக் கேட்டு இருக்க முடியும்.

முன்பு எல்லாம் கரண்ட் பில் கட்டுவதாக இருந்தால் மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்களில் போய்த்தான் பணம் கட்ட வேண்டும். ஆன்லைன் முறை வந்த பிறகு அதிக மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பில் வந்தால் ஆன்லைனில் செலுத்த வாரியம் அறிவுறுத்தியது. அதன்படி தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் அதைப் பின்பற்றி வந்தனர்.

இதில் படித்த சிலர் எவ்வளவு ரூபாய் கரண்ட் பில் வந்தாலும் கவுண்ட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தப்படி ஆன்லைனிலேயே பணத்தைக் கட்டி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கரண்ட் பில் கட்டுபவர்கள் ஆன்லைனில்தான் கட்ட வேண்டும் என்று வாரியம் அறிவுறுத்தியது. இதனையும் பலர் பின்பற்றி வந்தனர்.

இந்தநிலையில் தற்போது ரூ.1,000 பில் வந்தாலே ஆன்லைனில்தான் கட்டவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

இதுபற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள், மின்சார வாரிய அதிகாரிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

'பேடிஎம்' வசதி தேவை

தமிழ்நாடு மின்சார வாரிய என்ஜினீயர் யூனியன் பொது பொருளாளர் கே.கல்யாணசுந்தரம் கூறும்போது, 'ஆன்லைன் மூலம் கரண்ட் பில் கட்டுவது என்பது ஒரு நல்ல திட்டம்தான். பொதுமக்கள் தேவை இல்லாமல் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. சர்வர் பிரச்சினை காரணமாக காலதாமதம் ஏற்பட்டால் அதற்காக தேவையில்லாமல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டியதில்லை. ஊழியர்களுக்கும் பொதுமக்கள் கட்டிய பணத்தை வங்கியில் செலுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளும் தவிர்க்கப்படும். நகரப்பகுதிகளில் இதற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. கிராமப்பகுதிகளில் உள்ளவர்கள் ஆன்லைன் என்றால் தேவை இல்லாமல் ஒரு முகவரை சந்திக்க வேண்டும். அவர்களுக்கு கரண்ட் பில்லுடன் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சூழல் ஏற்படும். அதேபோல், தனியார் வங்கிகளில் கடைசி தேதியில் பணத்தை செலுத்தும் போது, அது வாரியத்தின் கணக்கிற்கு வருவதற்கு ஒரு நாள் ஆகிவிடுகிறது. வாரிய அலுவலகத்தில் பணம் கட்டியதற்கான சான்று இல்லாததால், தேவையில்லாமல் மின்துண்டிப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.

கவுண்ட்டர்களில் ஏ.டி.எம். கார்டுகளை தேய்த்து பணம் பெறும் வசதி மட்டுமே இருக்கிறது. ஆனால் சாதாரண தள்ளுவண்டி இட்லி கடையில் இருப்பது போன்ற 'பேடிஎம்' போன்ற வசதிகள் இன்னும் வாரியத்திற்குள் வரவில்லை. கவுண்ட்டர்களில் ஊழியர்கள் தட்டுப்பாடால் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை, மாறாக சர்வர் பிரச்சினையால் காலதாமதம் ஏற்படும் போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே கவுண்ட்டர்களில் பேடிஎம் உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்டு வருவதுடன், சர்வர் மற்றும் இணையத்தள வசதிகளை வலுப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் பொதுமக்கள் தானாகவே ஆன்லைனை தேடிச்சென்று விடுவார்கள்' என்றார்.

பணம் வசூலிக்க மின்கணக்கீட்டாளர்

நுகர்வோர் மன்றத்தின் (சிட்டிசன் கன்ஸ்யூமர் அன்ட் சிவிக் ஆக்ஸன் குரூப்) முதுநிலை ஆய்வாளர் கே.விஷ்ணு மோகன் ராவ் கூறும் போது, 'கவுண்ட்டர்களில் பணத்தை கையாள்வதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் காசோலைகள் கையாள்வது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஆன்லைன் முறையில் கரண்ட் பில் கட்டும் முறை அறிவிக்கப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வாரியத்திற்கு உடனடியாக பணம் கிடைக்க வேண்டும் என்றால் ஆன்லைன் என்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் இந்த முறை நகரப்பகுதிகளில் அமல்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பாமரமக்கள் என பலதரப்பட்ட மின்சார நுகர்வோர்களால் ஆன்லைனில் பணம் செலுத்த வாய்ப்பு இல்லை. அதேபோல் மூத்த குடிமக்களாலும் ஆன்லைனில் பணம் செலுத்த முடியாது என்பதால் அவர்கள் பிறரை நாடிச் செல்ல வேண்டியிருக்கும். இவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் மின்சாரம் கணக்கிட வருபவர்களையே பணம் வசூலிக்கவும் அறிவுறுத்தலாம்' என்றார்.

வரவேற்கத்தக்கது

வளையப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் கூறியதாவது:-

தற்போதைய கால சூழலில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். பொதுமக்கள் மத்தியில் ஆன்லைன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. ஏற்கனவே ரூ.1,000-க்கு கீழ் மின் கட்டணம் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மூலமே பணம் செலுத்தி வருகிறார்கள். தற்போது ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் வருபவர்களும் ஆன்லைனில் எளிதாக பணம் செலுத்தி விட முடியும். இந்த நடைமுறையானது மின்வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக அமையும். ஏற்கனவே மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மின் கட்டணத்தை செலுத்தி வந்தவர்களுக்கு, ஏற்பட்ட சர்வர் பிரச்சினைகளுக்கும் தற்போது தீர்வு கிடைத்து விட்டது. மேலும் அவர்களுக்கான பயண நேரமும் மீதமாகும். அதற்கு பதிலாக இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தலாம். எனவே இந்த திட்டம் வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

ரத்து செய்ய வேண்டும்

பொத்தனூரை சேர்ந்த பிரபு:-

மின் கட்டணங்கள் மின்வாரிய அலுவலக கவுண்டர்களில் வசூல் செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ரூ.1,000-க்கு மேல் உள்ள மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்து உள்ளது. அது நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் பெரும்பாலான கிராமப்புற மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு இன்னும் ஆன்லைன் பயன்பாட்டு பரிச்சயமாகாத ஒன்றாக உள்ளது. எனவே இத்தகைய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். அதற்காக அவர்கள் தனியார் கட்டமைப்பில் உள்ள இன்டர்நெட் சென்டர்களை நாட வேண்டிய நிலை ஏற்படும். அங்கு மின்கட்டணத்தை செலுத்த கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். மீண்டும் மின் கட்டணத்தை மின் வாரிய அலுவலக கவுண்டரிலேயே செலுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மின் பயன்பாட்டை கணக்கிட வருபவர்களே மின் கட்டணத்தை வசூலிக்க ஏதுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

புதிய நடைமுறைக்கு மாற சிரமம்

விசைத்தறி உரிமையாளர் கலைவாணன்:-

விசைத்தறியாளர்களுக்கு சர்வ சாதாரணமாக ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் வரும். அவர்களில் பெரும்பாலானவர்கள் மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணத்தை செலுத்தி பழக்கப்பட்டவர்கள். தற்போது வந்துள்ள புதிய நடைமுறைக்கு அவர்கள் மாறுவதற்கு சிரமமாக இருக்கும்.

ஆனால் ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, பணம் மின்வாரியத்தை சென்றடைந்ததா என்பதை கூட அறிந்து கொள்வதில் சிரமம் அடைவார்கள். அல்லது அதற்காக செல்போன் கடைகள், இன்டர்நெட் சென்டர்கள் என அவர்கள் தேடிச் செல்ல வேண்டிய நிலை உருவாகும். அங்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே கிராமப்புற மக்கள் மற்றும் விசைத்தறியாளர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மின்வாரிய அலுவலகங்களிலேயே காலதாமதமின்றி மின் கட்டணத்தை வசூல் செய்ய ஏதுவான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

பழைய முறையில் மின்கட்டணம்

திருச்செங்கோட்டை சேர்ந்த ராணி:-

அனைவராலும் ஆன்லைன் மூலம் மின் கட்டணத்தை செலுத்த முடியாது. இன்னமும் கணினி மற்றும் ஆன்லைன் முறையை பயன்படுத்த தெரியாதவர்கள் உள்ளனர். எனவே ஆன்லைன் முறையில் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு ஏதுவாக அரசு பாமர மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுவரை அவர்களுக்கு மின்வாரிய அலுவலகத்தில், பழைய முறையிலேயே மின் கட்டணத்தை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அவ்வாறு செலுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கலை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story