இணையவழியில் பணம் பெற்று மோசடி; வாலிபர் கைது
இணையவழியில் பணம் பெற்று மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஏமாற்றியதாக புகார்
அரியலூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரிடம், பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பெங்களூருவில் உள்ள நிறுவனங்களை சேர்ந்தவர்களை காப்பீட்டுதாரர்களாக சேர்த்து விடுவதாக கூறி, அதற்கு சேவை கட்டணமாக ராேஜந்திரனிடம் இருந்து மொத்தம் ரூ.10 லட்சத்து 51 ஆயிரத்து 200-ஐ இணையதளம் மூலம் பெற்றுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் பணத்தை பெற்றுக்கொண்டு, தன்னை ஏமாற்றியதாக ராஜேந்திரன் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கைது
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் கர்நாடக மாநிலம் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு மாருதி சேவா நகர் பகுதியை சேர்ந்த சங்கல ராயப்பாவின் மகன் சந்தோசை(வயது 27) கைது செய்தனர். அவரிடம் இருந்து மடிக்கணினி, ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.