கவர்னர் ஒப்புதலுக்கு காத்து இருக்கும் தடை மசோதா:ஆட்டங்காட்டும் 'ஆன்லைன்' சூதாட்டம்-வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து
கவர்னர் ஒப்புதலுக்கு காத்து இருக்கும் தடை மசோதாவால் ஆன்லைன்' சூதாட்டத்துக்கு தடை விதிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது குறித்து வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோர் கைகளில் 'ஸ்மார்ட் போன்'கள் தவழ்கின்றன. பலரும் 'ஆன்லைன்' விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள். 'ஆன்லைன்' விளையாட்டுகளில் திறமைக்கு சவால்விடும் வகையில், பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், அதில் 'ரம்மி' போன்ற சூதாட்டம் புகுந்து, விளையாடுகிறவர்களின் மனங்களை மசியம் செய்து மயக்குவதுடன், பண ஆசைகாட்டி இழுக்கிறது.
இந்த விளையாட்டுகளில் பண இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த நிறுவனங்களே எச்சரிக்கை விடுத்தாலும், 'எப்படியும் ஒருமுறை வெற்றி பெற்றுவிடலாம். இழந்த பணத்தை மீட்டுவிடலாம்' என்ற நம்பிக்கை வெறியோடு பலர் பணத்தை இழந்து வருகிறார்கள். சேமித்த பணத்தை இழந்து கடனாளியானவர்கள் தற்கொலை முடிவை தேடுகிறார்கள்.
தடையை தகர்த்தனர்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த விளையாட்டுகளை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடி தடையை தகர்த்துவிட்டன. கொரோனா காலகட்டத்தில் இந்த விளையாட்டுகள் கொடிக்கட்டிப் பறந்தன. வேலையிழப்பு அதிகரித்ததால் ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் பதிவிறக்கம் அசுர வேகத்தில் நடைபெற்றன.
அதே வேகத்தில் சூதாடிப் பணத்தை இழந்தவர்கள் நிம்மதியை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் விளைவால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற குரல் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஓங்கி ஒலித்தது.
நிரந்தர தடை சட்டம் எப்போது?
அந்த குரலுக்கு செவி சாய்த்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை அவசியம் என்று அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க அவசரச் சட்டம் நிறைவேற்றுவது என்று தீர்மானித்தது. அக்டோபர் மாதம் 1-ந் தேதி அதற்கான அவசரச் சட்டத்தை நிறைவேற்றி தமிழக கவர்னரின் ஒப்புதலுடன், அரசிதழிலும் வெளியிட்டது.
அந்த அவசர சட்டத்தை நிரந்தரம் ஆக்குவதற்கான சட்ட மசோதா கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே ஆன்லைன் சூதாட்டத்துக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடியும். ஆனால் இந்த மசோதாவுக்கு இன்னமும் கவர்னரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
கவர்னர் விரைவில் முடிவு
கவர்னர் தரப்பில் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 3 கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கேட்டிருந்தார். தமிழக சட்டத்துறையும் உடனடியாக அந்த கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளித்து இருக்கிறது. தமிழக அரசு அளித்துள்ள விளக்கங்களை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்துவிட்டு கவர்னர் விரைவில் ஒரு முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதுபற்றி சட்ட வல்லுனர்களும், சமூக ஆர்வலர்களும், ஆன்லைன் சூதாட்ட பாதிப்புகள் குறித்து உணர்ந்தவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
வக்கீல்கள் கருத்து
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன்:- ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தமட்டில் வயது வரம்பில்லாமல் ஆண், பெண், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் விளையாடி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தங்களது பெற்றோரின் வங்கி கணக்கை பயன்படுத்தி இந்த விளையாட்டில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இது லாட்டரி சீட்டுகளைவிட பல மடங்கு கொடுமையானது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தில் முடிவெடுப்பதில் கவர்னர் எந்தவித தாமதமும் செய்யக்கூடாது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கவர்னர் தாமதம் செய்ததால் சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆன்லைன் சூதாட்டம் என்பது பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய விவகாரம் என்பதால் கவர்னர் விரைந்து முடிவு எடுப்பது தான் மக்களுக்கு செய்யும் நன்மை ஆகும்.
வேதனைக்குரியது
சேலம் நிலவாரப்பட்டியை சேர்ந்த வக்கீல் மணிகண்டன்:- தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு இதுவரை 25-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இது வேதனைக்குரியது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கு கவர்னர் ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடர்ந்து உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் வட்டமுத்தாம்பட்டியை சேர்ந்த கிள்ளிவளவன்:-
ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து கடன் நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் இருக்கும் இளைஞர்கள், தனது உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் நாசமாக்கப்படுகின்றன. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
ஒப்புதல் வழங்க வேண்டும்
கோரிமேட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரபாகரன்:- ஆன்லைன் சூதாட்டத்திற்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிமையாக இருக்கிறார்கள். தவறான பாதைக்கு செல்லும் இளைய சமூகத்தினரை மீட்க வேண்டும். சினிமா பிரபலங்கள் சிலர் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டு தூதர்களாக இருப்பது கவலைக்குரியது. நேற்று முன்தினம் சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த வடமாநில இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே, ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவுக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தனியார் பள்ளி ஆசிரியை ஹேமலதா:- இன்றைய சூழ்நிலையில் நடைமுறை வாழ்க்கை முழுவதுமே ஆன்லைன் வாழ்க்கையாக மாறிவிட்டது ஆன்லைனில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்த காலம் போக பெரியவர்களும் அடிமையாகும் அளவுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் அதிகமாகி விட்டன. இளைஞர்கள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் பணம் வந்து குவிய வேண்டும் என நினைத்து ஆன்லைன் விளையாட்டால் நிம்மதியை இழக்கின்றனர். இறுதியில் உயிரையும் விடுகின்றனர். எனவே, ஆன்லைன் சூதாட்ட தடை அவசர மசோதாவுக்கு கவர்னர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும்.
உயிரை பறிக்கும் விளையாட்டு தேவையா?
ஓமலூர் காருவள்ளியை சேர்ந்த சீனிவாசன்:- கஷ்டப்பட்டு உழைத்து சேமிக்கும் பணமே கரைந்து போய்விடுகிறது. இதில் ஆன்லைன் சூதாட்டம் போன்ற குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்து சேமித்த பணத்தையும் பலர் இழந்து வருகின்றனர். தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்துக்கட்ட தமிழக அரசு தீவிரம் காட்டுவது பாராட்டுக்குரியது. தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கும் செயலாக உள்ளது. உயிரை பறிக்கும் விளையாட்டு தேவையா?. எனவே, சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் நிரந்தர சட்டம் அவசியமும், அத்தியாவசியமும் ஆகும். இந்த நிரந்தர சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'ஆன்லைன்' சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருப்பவர்கள், அரசாங்கம் தடை போட்டாலும், விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் மேல் முறையீடு செய்யும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதையும் காண முடிகிறது.