ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தற்கொலை


ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசில் கூறியதாவது:-

ஆன்லைன் சூதாட்டம்

கோவை அருகே உள்ள வெள்ளலூர் கருப்புராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 55). தொழிலாளி. இவருடைய மனைவி நாகலட்சுமி (50). இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் மதன்குமார் (25). இவர் பி.எஸ்சி (ஐ.டி) படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்தார்.

அப்போது அவர் அடிக்கடி செல்போனில் ஆன்லைன் ரம்மி மற்றும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். நாளடைவில் மதன்குமார் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தியதால் மதன்குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் கடந்த சில நாட்களாக கடுமையான தலை வலி மற்றும் கண்பார்வை மங்கி பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

தலைவலி, கண்பார்வை மங்கியதால் மதன்குமார், மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்்த நிலையில் நேற்று முன்தினம் காலை நாகலட்சுமியும், பாலசுப்பிரமணியனும் வழக்கம் போல வேலைக்கு சென்றனர்.

இதனால் மதன்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் ஆன்லைன் விளையாட்டால், உடல்நிலை பாதிக்கப்பட்டதை நினைத்து வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததாலும், சரியான வேலை கிடைக்காததாலும், வாலிப வயதிலேயே கண்பார்வை மங்கியதாலும் வாழ்க்கையில் விரக்தியடைந்த மதன்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் மாலையில் வேலை முடிந்து வந்த நாகலட்சுமி வீட்டிற்குள் சென்றார். அப்போது அங்கு தனது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் விரைந்து வந்து, வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story