ஆன்லைன் சூதாட்டம் - அண்ணனை கொலை செய்த தம்பி - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்


ஆன்லைன் சூதாட்டம் - அண்ணனை கொலை செய்த தம்பி - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்
x

தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட தகராறில் அண்ணனையே தம்பியை கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி,

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா கொண்டு வந்தும் அந்த தடை செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு 48 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளுக்கு நாள் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்த வண்ணமே உள்ளது குறைந்தபாடில்லை அந்த அளவிற்கு ஆன் லைன் சூதாட்டம் என்ற அரக்கம் மனித உயிர்களை குடித்து வருகிறது. நாட்டிலேயே குடும்ப தலைவி ஒருவர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்டதும் தமிழகத்தில் தான் நடந்துள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட பண இழப்பால் உடன் பிறந்த அண்ணனையே தம்பியே அடித்துக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி மேற்கு சிப்காட் வளாக காட்டுப் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அங்கு இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து விசாரித்ததில், இறந்தவர் பெயர் சில்லாநத்தத்தைச் சார்ந்த சொக்கலிங்கம் மகன் நல்லதம்பி என்பது தெரிய வந்தது. இவரது தம்பி முத்துராஜ் மதுரை பைபாஸ் சாலையில் லாரி செட் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நல்லதம்பி ஆன்லைன் ரம்மியில் சிறு சிறு தொகையை போட்டு விளையாடி வந்துள்ளார். காலப்போக்கில் அதிக பணத்தை கட்டி விளையாடி ரூ.30 லட்சம் வரை இழந்துள்ளார். மேலும், நல்லதம்பி தனது உடன் பிறந்த தம்பிக்கும் உரிமையுள்ள லாரியை விற்றும் அந்த பணத்தை வைத்து சூதாடி இழந்துள்ளார்.

இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டு பிற லாரி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய பணத்தையும் சரியாக கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும், தம்பி முத்துராஜிடம் ரூ.3 லட்சம் கடனாக பெற்று அவருக்கு திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதில் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து முத்துராஜ் தனது அண்ணன் நல்லதம்பியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கையில் கொண்டு வந்த கம்பியால் அவரது தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

சிப்காட் போலீசார் அவரை கைது செய்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் பணம் கொடுக்கல் வாங்குவதில் அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் தம்பி அண்ணனை கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story