முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் சேவை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் சேவையை துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்
வடவள்ளி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் சேவையை துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.
இணையதள சேவை
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அண்ணா வளாகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி, 2022-23-ம் கல்வி ஆண்டில் சேர விண்ணப்பத்திற்கான இணையதள சேவை நேற்று தொடங்கியது. இதை துணை வேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து துணை வேந்தர் கீதாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த பல்கலைக்கழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மற்றும் பி.எச்.டி. படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இணையதள சேவை நேற்று தொடங்கப்பட்டது.
இதில் மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். ஆகஸ்டு மாதம் 8-ந் தேதிவரை இந்த இணையதள சேவை செயல்படும். அதற்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு
முதுகலை முடித்த மாணவர்கள் பட்டபடிப்பு சான்றிதழ் மூலமாகவும், ஓரிரு மாதங்களில் படிப்பை முடிக்க உள்ளவர்கள் டீனிடம் கடிதம் பெற்றும் http://admissionsatpgschool.tnau.ac.in என்ற இணைய முகவரியில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
எம்.எஸ்சி., பி.எச்.டி. படிப்புகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 8 கல்லூரிகளில் உள்ளது. ஆகஸ்டு 11-ந் தேதிக்குள் விண்ணப்பித்த மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
அதைத்தொடர்ந்து ஒரு நுழைவு தேர்வு ஆகஸ்டு 27-ந் தேதியும், மற்றொரு நுழைவு தேர்வு 28-ந் தேதியும் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.
மாணவர் சேர்க்கை
இதையடுத்து செப்டம்பர் 2-வது வாரத்தில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கும். 3-வது வாரத்தில் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். அக்டோபர் முதல் வாரத்தில் கல்லூரி செயல்பட தொடங்கி விடும்.
வேளாண்மை பல்கலைக்கழகம் பல்வேறு நாடுகளில் இணைந்து செயல்பட உள்ளது. இதனால் ஆராய்ச்சியின் தரம் உயர்த்தப்ப டும். வருடத்திற்கு 400 மாணவர்கள் இளநிலை படிப்பும், 200 மாணவர்கள் பி.எச்.டி படிப்பார்கள். இம்முறை எந்த புதிய படிப்புகளும் அறிமுகப்படுத்த வில்லை
இளநிலை படிப்புகள்
இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் ஆன்லைன் சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. சர்வதேச கருத்தரங்கு அடுத்த மாதம் (ஜூலை) 19 மற்றும் 20-ந் தேதி நடத்தப்படும்.
இதனால் சிறந்த முதல் 100 மாணவர்களை கொண்டு விவசாயத்தை ஊக்குவிப்பது, தொழில் முனைவோராக ஆலோசனை வழங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.